எண்ணூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் – கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் சேவையை எண்ணூர் வரை விரிவுபடுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) சார்பில் எண்ணூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிபிஐஎம் ஒன்றாவது வார்டு வட்டச் செயலாளர் தோழர் தியாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். திருவொற்றியூர் – எண்ணூர் வடக்குப் பகுதி குழு உறுப்பினர் தோழர் கே. பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சிபிஐஎம் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எல். சுந்தர்ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
மேலும், எண்ணூர் மக்கள் நலச் சங்கத் தலைவர் தோழர் கௌஸ்பாஷா, சங்கச் செயலாளர் பி. சுதாகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
கையெழுத்து இயக்கத்தில் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, மெட்ரோ ரயில் திட்டத்தை எண்ணூர் வரை விரிவுபடுத்த வேண்டும் எனக் கையெழுத்திட்டனர். பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனிடையே, சில பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை எண்ணூருடன் நிறுத்தாமல் மீஞ்சூர் அல்லது பொன்னேரி வரை நீட்டிக்க வேண்டும் எனத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். மேலும், இத்திட்டத்தை கும்மிடிப்பூண்டி வரை விரிவுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கியக் கோரிக்கை யாகவும் வலியுறுத்தப்பட் டது.
இந்நிகழ்ச்சியில் சிபிஐஎம் பகுதி செயலாளர் எஸ். கதிர்வேல், பகுதி குழு உறுப்பினர்கள் கே. வெங்கட், ஐயா ராஜ்குமார் மற்றும் கிளைச் செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எண்ணூர், மணலி, மாதவரம், மாத்தூர் உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்தக் கையெழுத்து இயக்கத்தின் முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top